தொற்றாநோய்களுக்கு கூடுதல் நிதி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை:'அதிகரித்து வரும் தொற்றா நோய்களுக்கு, தமிழக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என, அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில், 2025 - 26 பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 'வரும் நிதியாண்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு கூடுதல் நிதி பெற வேண்டும். குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் டெங்கு, மம்ப்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்கள், அனைத்து காலகட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

'அதேபோல், இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களும் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில், 2024 - 25ம் நிதியாண்டில், மக்கள் நல்வாழ்வு துறைக்கு, 20,198 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வரும் நிதியாண்டில், கூடுதல் நிதி கோரப்பட்டு உள்ளது.

குறிப்பாக, தொற்று மற்றும் தொற்றாநோய்கள் தடுப்புக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், தொற்றா நோய் தடுப்புக்கு என, தனியாக நிதி ஒதுக்கும்படி கோரப்பட்டுள்ளது. பட்ஜெட் மானிய கோரிக்கையில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், நோய் தடுப்பு குறித்து புதிய அறிவிப்புகள் இடம்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement