அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்

5

ஆமதாபாத்: அமெரிக்காவுக்கு விசா கிடைக்க வேண்டும் என்று, ஆமதாபாதின் ஹனுமன் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தரணும் என்றும் வேண்டிகொள்கின்றனர்.

குஜராத்தின் ஆமதாபாதில் அமைந்துள்ளது சமத்காரி ஹனுமன் கோவில். இந்தக் கோவிலின் விசேஷம், ஹனுமனை மனமுருகி வேண்டிக் கொண்டால், உடனடியாக விசா கிடைத்து விடும். குறிப்பாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இந்தக் கோவிலுக்கு வருவது சகஜம்.

அதிர்ச்சி

சாதாரணமாக இந்தக் கோவிலில், தினமும், 1,000 பேர் வருகை தருவர். விசா ஹனுமன் என்று அழைக்கப்படும் சமத்காரி ஹனுமனை தரிசிக்க தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர்; குறிப்பாக இளைஞர்கள் வருகை அதிகம்.

அமெரிக்க அதிபராக, கடந்த மாதம், 20ம் தேதி பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். உடனேயே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளோரை வெளியேற்றுவது, வேலை பார்க்க வருவோருக்கான விசாவை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.

அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவை அதிகம் பெறும் நாடுகளில் நம் நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்புகள், அமெரிக்க விசாவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளன.

நல்ல புத்தி

எந்தப் பிரச்னையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என்று விசா ஹனுமனிடம் கோரிக்கை வைக்க ஆயிரக்கணக்கானோர் இந்தக் கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர்.

தங்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்க டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டி கொள்கின்றனர்.

இதுபோன்ற பல கோவில்கள் நாடு முழுதும் உள்ளன. வெளிநாடுகளுக்கு செல்ல நினைப்போர், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காக அங்கும் படை எடுத்து வருகின்றனர்.

Advertisement