மியான்மருக்கு மின்சாரத்தை நிறுத்தியது தாய்லாந்து
பாங்காக்: மியான்மரில், ஆன்லைன் மோசடி கும்பல்கள் செயல்படும் நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகத்தை தாய்லாந்து அதிரடியாக நிறுத்தி உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் மியாவாடி, டச்சிலெக் உள்ளிட்ட நகரங்கள், ஆன்லைன் மோசடி கும்பல்களின் புகலிடமாக உள்ளன.
இந்த பகுதிகளில் இருந்து செயல்படும் மோசடி கும்பல்கள், பல வழிகளில், உலகம் முழுதும் லட்சக்கணக்கானோரை ஏமாற்றி உள்ளன.
மியாவாடி, டச்சிலெக் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அண்டை நாடான தாய்லாந்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மோசடி கும்பல்களால், தாய்லாந்திலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தினமும், 20 கோடி ரூபாய் அளவுக்கு தாய்லாந்துக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மோசடி கும்பல்கள் செயல்படும் நகரங்களுக்கான மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை, தாய்லாந்தில் வலுத்தது. இது தொடர்பாக விவாதிக்க, தாய்லாந்து துணை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தலைமையில், பாங்காக்கில் நேற்று அவசர கூட்டம் நடந்தது.
இதில், மியான்மரின் மியாவாடி, டச்சிலெக் உள்ளிட்ட ஐந்து நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
இந்த நகரங்களில் விற்கப்படும் மின்சாரத்தால், தாய்லாந்துக்கு ஆண்டுக்கு, 156 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.