கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மாலை நேர மின்தேவையை பூர்த்தி செய்வதில், அடுத்த மாதத்தில் இருந்து, மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என, மின் வாரியத்திற்கு, மத்திய மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக மின் தேவை, தினமும் காலை, மாலை சராசரியாக, 16,000 மெகா வாட்டாகவும்; மற்ற நேரங்களில், 15,000 மெகா வாட்டாகவும் உள்ளது. இது, கோடைக்காலத்தில் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மே, 2ல் மின்தேவை, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
வரும் கோடைக்காலத்தில் மின்தேவை, 22,000 மெகாவாட்டை தாண்டும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப வரும் மாதங்களில் காலை, மாலையில் மின்தேவை எவ்வளவு அதிகரிக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை ஏற்படும் அளவு ஆகிய விபரங்களை, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மாலைநேர மின் தேவையை பூர்த்தி செய்வதில், மார்ச் 3,810 மெகா வாட்; ஏப்ரல் 4,697 ; மே, 3,472; ஜுன் 2,192; ஜுலை 326 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என, தமிழக மின்வாரியத்தை, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பகலில் சூரியசக்தி மின்சாரம் அதிகம் கிடைக்கும் என்பதால், காலை மற்றும் பகலில், மின்தேவையை பூர்த்தி செய்ய, சிரமம் இல்லை.
வரும் மாதங்களில், பள்ளி பொதுத்தேர்வு, கோடை வெயில், அனல் காற்று உள்ளிட்ட காரணங்களால், மின்தேவை அதிகரிக்கும். பற்றாக்குறையை சமாளிக்க, பரிமாற்ற முறையில் மின் கொள்முதல், குறுகிய கால மின் கொள்முதல் என, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, அதிகரிக்கும் மின்தேவையை, பற்றாக்குறை ஏற்படாமல் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் - 19,500 - 15,688 - 3,812 ஏப்ரல் - 20,700 - 16,003 - 4,697மே - 20,450 - 16,978 - 3,472ஜூன் - 18,300 - 16,108 - 2,192ஜூலை - 18,400 - 18,074 - 326ஆகஸ்ட் - 18,300 - 17,338 - 962செப்டம்பர் - 18,000 - 17,725 - 275அக்டோபர் - 19,350 - 16,922 - 2,428 நவம்பர் - 17,300 - 14,947 - 2,353டிசம்பர் - 17,200 - 14,838 - 2,362*