ரூ.28 லட்சம் 'டிபாசிட்' செய்ததாக ஐ.டி., 'நோட்டீஸ்'அதிர்ச்சி அடைந்த தொழிலாளி நீதிமன்றத்தில் புகார்
ஆத்துார்: இரு வங்கிகளில், 28.37 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்ததாக, சேலம் வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பியதால், அதிர்ச்சி அடைந்த தொழிலாளி, ஆத்துார் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்வராயன்மலை, வடக்குநாடு ஊராட்சி, வளக்காபட்டை சேர்ந்தவர் அண்ணாதுரை, 40. விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு, கடந்த ஜன., 7ல், சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அதில், 'இரு வங்கிகளில், 2020 - 21ல், 28.37 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' வைத்துள்ளதால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு இல்லாத நிலையில், அண்ணாதுரை அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து நேற்று அவர், ஆத்துார் சார்பு நீதிமன்றத்தில் அளித்த புகார் மனு:வளக்காப்பட்டில், 3.50 ஏக்கர் நிலம் வைத்தும், கூலி வேலைக்கு சென்றும் பிழைப்பு நடத்தி வருகிறேன். சேலம் வருமான வரித்துறையினரிடம் இருந்து தபால் வந்தது. அதில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், 1.37 லட்சம் ரூபாய், சேலம், தமிழ்நாடு கிராம வங்கியில், 27 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளதாகவும், அது
குறித்த விபரங்களும் கேட்டுள்ளனர். அந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு, டிபாசிட் கிடையாது. அதற்கு பணமும் இல்லை. நான் வசிக்கும் பகுதியில் உள்ள மலைவாழ் பல்நோக்கு கூட்டுறவு வங்கி, கருமந்துறை இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. இந்த சேமிப்பு கணக்கில் பயிர் கடன், நகை கடன் மட்டும் பெற்றுள்ளேன். வருமான வரித்துறை அறிவிப்பால் கலக்கமடைந்து, மன உளைச்சலில் உள்ளேன். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்து, என்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.