சிறுதானியங்களை பதப்படுத்தும் மைய பயனாளிகள் தேர்வு தீவிரம் பயனாளிகள் தேர்வு தீவிரம்
சென்னை:சிறுதானியங்களைப் பதப்படுத்தும் முதன்மை மையங்கள் அமைக்க, மானியம் வழங்கும் பணியை, வேளாண்துறை துவக்கி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் கேழ்வரகு, வரகு, சாமை, தினை, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சிறுதானியங்கள் பயன்பாடு, நாடு முழுதும் அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப அவற்றின் தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் சிறுதானியங்களுக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நல்ல விலை கிடைத்து வருகிறது.
எனவே, சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பணியில், வேளாண் துறை கவனம் செலுத்தி வருகிறது. சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரித்து, அவற்றை மதிப்பு கூட்டி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, சிறுதானியங்கள் பதப்படுத்தும் முதன்மை மையங்கள் அமைக்க, வேளாண்துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது. இத்திட்டத்தின் கீழ், இயந்திரங்கள் வாங்க, விவசாயிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகையில், 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.