புதிய ஊதிய ஒப்பந்தம் தாமதமாவதால் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பஸ் ஊழியர்கள்
சென்னை:போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தாமதம் நீடிப்பதால், தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், 1.23 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஒப்பந்தம் செய்யப்படாமல் உள்ளது.
முதற்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 27ல் நடந்தது.
இரண்டாம் கட்ட பேச்சு, கடந்த ஆண்டு டிச., 27, 28ம் தேதிகளில் நடக்க இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததால், பேச்சு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பின், இன்னும் ஊதிய ஒப்பந்தப் பேச்சு நடத்தாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
தாமதம் ஏன்?
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தமிழக அரசின் நிதி வழங்கினால் மட்டுமே, நெருக்கடியை சமாளிக்க முடியும். ஊழியர்களின் மாத சம்பளத்துக்கே, அரசிடம் கடன்பெற வேண்டிய சூழல் உள்ளது.
இச்சூழலில், ஊதிய ஒப்பந்தப் பேச்சில், அதிக ஊழியர்களின் ஆதரவு பெற்ற பெரிய தொழிற்சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, ஒப்பந்தப் பேச்சில், தி.மு.க.,வின் தொ.மு.ச., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., சங்க நிர்வாகிகள் அதிகம் பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, அங்கீகார தேர்தல் நடத்தி, 51 சதவீதம் ஓட்டுகள் பெறும் சங்கத்தை பேச்சுக்கு அழைக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க.,வின் அ.தொ.பே., சங்கம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகளால் தான் ஊதிய ஒப்பந்தப் பேச்சு தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேலைநிறுத்தம் எப்போது?
அ.தி.மு.க., தொழிற்சங்கமான அ.தொ.பே., தலைமையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டியை நேற்று, சந்தித்து பேசினர்.
பின், அத்தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் அளித்த பேட்டி:
ஊதிய ஒப்பந்தப் பேச்சு விரைவில் துவங்காவிட்டால், வேலை நிறுத்தத்துக்கு தயாராவோம். வரும் 25க்குப் பின், எப்போது வேண்டுமானாலும் வேலைநிறுத்தம் நடக்கும். தமிழகம் முழுதும் 99 சதவீத பஸ்கள் நிறுத்தப்படும் சூழல் ஏற்படும்.
எனவே, அரசு பேச்சுக்கு அழைக்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு சொற்ப அளவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தனியார் பஸ்சை அரசு வழித்தடத்தில் இயக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.