கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு உடந்தையாக இருந்த 3 பேர் கைது




கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு உடந்தையாக இருந்த 3 பேர் கைது


ஆத்துார் : ஆத்துார் அருகே வடசென்னிமலையை சேர்ந்தவர் செல்வராஜ், 54. ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வர் பொறுப்பில் உள்ளார். இவர், கடந்த, 23ல் வெளியூர் சென்றுவிட்டு, 25ல் வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடுபோனது தெரிந்தது. ஆத்துார் ஊரக போலீசார், 25 பவுன், 1 லட்சம் ரூபாய் திருடுபோனதாக, வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
இந்நிலையில் ஆத்துாரில் பைக்கில் சுற்றித்திரிந்த மூன்று பேரை, தனிப்படை போலீசார் பிடித்து நேற்று விசாரித்தனர். அதில் ஆத்துார், விநாயகபுரம் சதாசிவம், 41, பெரம்பலுார் மாவட்டம் கைகளத்துார், சிறுநிலா பகுதி ரஞ்சித்குமார், 39, சிவக்குமார், 37, என்பதும், அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் நகை திருடியதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்பதும் தெரிந்தது. இவர்களிடம், 5 பவுன் நகை, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள திருச்சியை சேர்ந்த முக்கிய குற்றவாளி இருவரை, போலீசார் தேடுகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கல்லுாரி முதல்வர் வீட்டில் நகை திருட்டு நடந்தபோது, 51 பவுன், ஒரு லட்சம் ரூபாய் திருடுபோனதாக புகார் கூறினர். போலீசார் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்து சிதறி கிடந்த துணிகளில், 26 பவுன் கிடந்தது. மீதி நகைகள் திருடுபோனது தெரியவந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது' என்றனர்.

Advertisement