ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய மேலும் 3 பேர் கைது
ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய மேலும் 3 பேர் கைது
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது, பெட்ரோல் குண்டுகள் வீசியது தொடர்பாக மேலும், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரிசி கடை மீது கடந்த, 2ம் தேதி நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர். எஸ்.பி., விவேகானந்த சுக்லா, தலைமையில், 7 தனிப்படைகள் அமைத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் எஸ்.ஐ., முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், தமிழரசன், 38, என்ற பழைய குற்றவாளியின், 17 வயது மகனை, 3ம் தேதி சென்னை பல்லாவரத்தில் பிடித்து, வேனில் அழைத்து வந்தனர்.
அவர், காவேரிப்பாக்கம் வாணியன்சத்திரம் காட்டேரி பகுதி அருகே, எஸ்.ஐ. முத்தீஸ்வரனின் இடது கையை, கத்தியால் வெட்டி தப்பி செல்ல முயன்றபோது, இன்ஸ்பெக்டர் சசிகுமார் துப்பாக்கியால், அச்சிறுவனின் இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்து, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரிடம் முதற்கட்ட விசாரணையில், தந்தை தமிழரசன் மீதும், தன் மீதும், கூட்டாளிகள் மீதும் போலீசார் வழக்கு பதிந்ததால், பழிவாங்கும் நோக்கத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. தமிழரசன் மீது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சில் தலைமறைவான அச்சிறுவனின் கூட்டாளிகள் சிப்காட்டை சேர்ந்த, விஷால், 19, மற்றும் 17 வயது சிறுவனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். தமிழரசனை நேற்று போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்றவர், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவரின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.