போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை:போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம், நேற்று அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தமிழக போக்குவரத்து கழகங்களை பொறுத்தவரை, குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 பேர் உட்பட, 90,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 2015- அக்., மாதம் இறுதியாக, அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
அதன்பின், ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும்போது, ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி, பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்தனர்.
சமீபத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக, நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு, கூடுதலாக 27 சதவீதம், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு, கூடுதலாக 9 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், குறைந்தபட்சமாக 1,300 ரூபாய், அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை இம்மாதம் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வுடன் கூடிய, ஓய்வூதியத் தொகை நேற்று ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதுகுறித்து, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், '246 சதவீதம் அகவிலைப்படி பெற வேண்டியோருக்கு, 146 சதவீதம்; 48 சதவீதம் பெற வேண்டியவர்களுக்கு, 14 சதவீதம் என, இடைக்கால நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும், விரைந்து வழங்க வேண்டும்' என்றனர்.