புகார் கொடுத்த இளம் பெண்ணிடம் போட்டோ அனுப்ப சொன்ன இன்ஸ்.,
புகார் கொடுத்த இளம் பெண்ணிடம் போட்டோ அனுப்ப சொன்ன இன்ஸ்.,
கரூர்: கரூர் அருகே, புகார் கொடுத்த இளம் பெண்ணிடம், போட்டோ அனுப்ப சொல்லி கெஞ்சிய, போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு மற்றும் வாங்கல் சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்துார் பாண்டியன், 48. இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தங்க நகை காணாமல் போனது தொடர்பாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புகார் கொடுத்த இளம் பெண்ணை, வாட்ஸ் ஆப் காலில், தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் வாட்ஸ் ஆப் இமேஜை, நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும், உன் போட்டோவை எனக்கு அனுப்பி வை பிளீஸ் என, இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி., வருண் குமார் உத்தரவிட்டார். மேலும், வெங்கமேடு, வாங்கல் சர்க்கிள் போலீஸ் ஸ்டேஷனுக்கு, திருச்சி மாவட்டம், வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த முத்துசாமி இடமாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்று கொண்டார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட, இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன், சில ஆண்டுகளுக்கு முன், கரூர் டவுன் இன்ஸ்பெக்டராக இருந்த போது, விநாயகர் சிலையை எட்டி உதைத்த புகாருக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.