'சோழர்கள் இன்று' நுால் தமிழக அரசு பரிசுக்கு தேர்வு
சென்னை:'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'சோழர்கள் இன்று' நுால், தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நுாலுக்கான பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் வாயிலாக, 'சோழர்கள் இன்று' என்ற வரலாற்று நுால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொகுப்பாசிரியர் சமஸ். இந்த நுாலில், சோழர் கால ஆட்சி குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தின் 2,500 ஆண்டு கால வரலாற்றை எளிமையாக அறியும் வகையில், இந்த நுால் அமைந்திருந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக, 2023ம் ஆண்டு சிறந்த நுாலுக்கான பரிசுக்கு, 'சோழர்கள் இன்று' நுால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ் இசை மற்றும் கவின் கலை பல்கலையில், நாளை மறுநாள் நடக்கும் விழாவில், இதற்கான பரிசு வழங்கப்பட உள்ளது. நுால் தொகுப்பாசிரியருக்கு, 50,000 ரூபாயும், வெளியீட்டாளருக்கு, 25,000 ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.