கோவில் வாசலில் நிறுத்தப்பட்ட கார் தட்டி கேட்ட பூசாரிக்கு அரிவாள் வெட்டு

திருச்சி:திருச்சி அருகே விநாயகர் கோவில் வாசலில் காரை நிறுத்தியதை தட்டிக்கேட்ட பூசாரியை, அரிவாளால் வெட்டிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 34. ஆட்டோ டிரைவரான இவர், அதே பகுதியில் உள்ள பகவதியம்மன் கோவில், விநாயகர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளார்.

விநாயகர் கோவில் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பகுதி நிர்வாகியுமான சாதிக் பாட்ஷா, 41, என்பவர், தன் காரை எப்போதும் விநாயகர் கோவில் வாசலில் நிறுத்தி, கோவில் வழிபாட்டுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வரும் வாரத்தில் தைப்பூச விழா நடைபெற உள்ளதால், கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர் எனக் கூறி, காரை வேறு இடத்தில் நிறுத்த, பூசாரி சதீஷ்குமார், சாதிக் பாட்சா வீட்டிற்கு சென்று, சாதிக் பாட்ஷாவின் மனைவி சாய்ரா பானுவிடம் கூறினார்; அப்போது, கணவர் அங்கு இல்லை. கணவர் வந்ததும், பூசாரி கூறியதை மனைவி அவரிடம் கூறினார்.

கோபமடைந்த சாதிக் பாட்ஷா, நேற்று காலை விநாயகர் கோவிலில் இருந்த பூசாரி சதீஷ்குமாரிடம் சண்டை போட்டு, அவரை ஓட ஓட விரட்டி, பகவதியம்மன் கோவில் வாசலில் வைத்து, கழுத்து, முதுகு, கைகளில், அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த பூசாரி, திருச்சி அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.

இதுகுறித்த புகாரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சாதிக் பாட்ஷாவை தேடி வருகின்றனர்.

Advertisement