பலப்பல ஐடியாக்களுடன் விதவிதமாக ஏமாற்றி பணம் பறித்தேன் சேலம் தெரசா அறக்கட்டளை நிறுவனர் விஜயபானு வாக்குமூலம்
சென்னை:''விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீடுதாரர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்,'' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையது அகமது ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில் முக்கிய நபரான விஜயபானு, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
பண மோசடி தொடர்பாக, என் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு, சென்னை வடபழனி, பூந்தமல்லி காவல் நிலையத்தில், ஆறு வழக்குகள் உள்ளன.
பணமோசடி
இவ்வழக்குகளில் கைதாகி ஜாமினில் வெளி வந்த பிறகு, பண மோசடி செய்ய சேலத்திற்கு இடம் பெயர்ந்தேன். அங்கு, அம்மாப்பேட்டை என்ற இடத்தில், அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை துவக்கினேன். என்னுடன் அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயபிரதா, பாஸ்கர், சையது அகமது ஆகியோரை நிர்வாகியாக நியமித்தேன்.
எங்கள் அறக்கட்டளையில், 'இலவசமாக தையல், கணினி, ஆங்கில மொழி கற்று தரப்படும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூசன், பெண்களுக்கு கூடைப் பின்னல், பாக்குத்தட்டு தயாரிப்பு, மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரிப்பு மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும்' என, விளம்பரம் செய்தோம்.
மளிகை பொருட்கள்
இதனால், சேலம் மாவட்டத்தை சேர்ந்தோர் பலர் வந்தனர். பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தோம்.
இதனால், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. அதன் பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை, அறிமுகம் செய்தேன்.
பொதுமக்களை முதலீடுதாரர்களாக மாற்றினேன். ஒருவர் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒன்றரை மாதத்தில், 2,000 ரூபாய்க்கான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்றேன்.
அதன்படி வழங்கி, முதலீடுதாரர்களை நம்ப வைத்தேன்.
காலிமனை
அடுத்து, ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 7 மாதங்களுக்கு, தலா, 30,000 ரூபாய் வீதம், 2.10 லட்சம் ரூபாய் தரப்படும். மாதம், 10,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் செலுத்தினால், 750 சதுர அடி காலி மனை வழங்கப்படும்.
மாதம், 1,500 வீதம், 12 மாதங்களுக்கு,18,000 ரூபாய் செலுத்தினால், 5 கிராம் தங்க நகை வழங்கப்படும். சிறப்பு திட்டம் என்ற பெயரில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒன்பது மாதங்களுக்கு தலா, 30,000 ரூபாய் வழங்கப்படும் என, விதவிதமான திட்டங்களை அறிவித்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விஜயபானு மற்றும் அவரது கூட்டாளிகள், 4.32 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளாக, 216 பேர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் விரைந்து புகார் அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்' என்றனர்.