வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சி.பி.சி.ஐ.டி., கடிதம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விசாரணையைத் துவங்கும் வகையில், அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதில், ஜெகபர் அலி, சம்பந்தப்பட்ட ஒரு குவாரிக்கு மட்டும் தான் புகார் அளித்தாரா அல்லது எந்தெந்த குவாரிகளுக்கு அவர் முறைகேடு நடப்பதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகார்கள் மீது வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன; கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எந்த அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது உள்ளிட்ட கேள்விகளுக்கு, அறிக்கையோடு பதில் அளிக்குமாறு கேட்டுள்ளனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனித்தனியாக விசாரித்து வரும் நிலையில், அவர்கள் அளித்த பதிலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும், ஜெகபர் அலி கொலை வழக்கில் ஆர்.ஆர்., குவாரி உரிமையாளர்கள் மட்டும் சம்பந்தப்பட்டுள்ளனரா, வேறு யார் தொடர்பும் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.
ஜெகபர் அலி கொலை வழக்கில் கைதானவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய வீடு, கல் குவாரி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.