சென்னையில் கார் உற்பத்தி துவக்குவதில் ‛போர்டு' உறுதி: சிக்கல் என்ற தகவலுக்கு மறுப்பு
சென்னை: 'போர்டு' நிறுவனம் இந்திய சந்தைக்கு மீண்டும் திரும்புவது குறித்த இறுதி முடிவு தாமதமாவதாக வதந்தி பரவிய நிலையில், அந்நிறுவனம் இதை மறுத்துள்ளது. சென்னை மறைமலை நகர் ஆலையில் உற்பத்தியை துவங்க வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி உள்ளது.
இது குறித்து, போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
உலகச் சந்தைக்கான உற்பத்திக்கு சென்னை ஆலையை பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். எப்போது உற்பத்தி துவங்கும்; எந்த வகையான கார்கள் உற்பத்தி செய்யப்படும் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ச்சியான ஆதரவுக்கு தமிழக அரசுக்கு நன்றி.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபரானதால், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது, வாகன நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆலை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் திறக்க குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படுகின்றன. போர்டு நிறுவனம், இந்த ஆலையில் மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக இந்த ஆலையை சீரமைக்க, 900 கோடி முதல் 2,700 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும் என தொழில் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2021ல், இந்த ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஏற்றுமதிக்கு இந்த ஆலையை பயன்படுத்த இருப்பதாக கடந்த செப்டம்பரில் தெரிவித்திருந்தது.