அரசு 'செட்டாப் பாக்ஸ்' அதிகரிக்க முனைப்பு

திருப்பூர்: திருப்பூரில் வரும் மார்ச் மாதத்துக்குள் புதிதாக 50 ஆயிரம் அரசு செட்டாப் பாக்ஸ்களை இயக்கத்துக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பில் அடிக்கடி ஏற்படும் தடங்கல்,எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் இல்லாதது போன்ற காரணங்களால், முன்பு அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருந்த அரசு கேபிள் நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களை இழந்தது.

கடந்த 2022ல், திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் நிறுவனம், 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. தற்போது, 46 ஆயிரம் பேர்தான் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 700 அரசு கேபிள் ஆபரேட்டர்களில், 250 பேர், தனியார் கேபிளுக்கு மாறிவிட்டனர்.

தடையில்லாத ஒளி பரப்பு, எச்.டி., பாக்ஸ்கள் அறிமுகம் என, வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் அரசு கேபிள் நிறுவனம் தற்போது முனைப்புடன் செயல்படுகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், அரசு செட்டாப்பாக்ஸ்களை செயல்படுத்தாத, தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அரசு கேபிள் டிவி தாசில்தார் முரளி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் உரிமம் பெற்றுக்கொண்டு, ஒரு செட்டாப் பாக்ஸ்களை கூட செயல்படுத்தாத ஆபரேட்டர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி ஆபரேட்டர்கள், இம்மாத இறுதிக்குள் 30 ஆயிரம் அரசு செட்டாப் பாக்ஸ்களையும்;மார்ச் மாதத்துக்குள் மொத்தம் 50 ஆயிரம் பாக்ஸ்களையும் இயக்க நிலைக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு கேபிள் ஆபரேட்டராக இணைய, புதியவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்ற ஆபரேட்டர்கள், அரசு பாக்ஸ்களை செயல்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால், குறிப்பிட்ட இடங்களில் புதியவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுவிடும்.

இவ்வாறு முரளி பேசினார்.

ஆபரேட்டர்களுக்கு, புதிய அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ்கள் வழங்கப்பட்டன.

வாய்ப்பைத் தவற விட மாட்டோம்

அரசு கேபிள் ஆபரேட்டர்கள் உறுதி

அரசு கேபிள் உரிமம் பெற்று தனியாருக்கு மாறிய ஆபரேட்டர்கள் கூறுகையில், ''நாங்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தும்வகையில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். புதியவர்களுக்கு அரசு கேபிள் ஆபரேட்டர் உரிமம் வழங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு எங்களுக்கு வழங்கியுள்ள வாய்ப்பை தவறவிடமாட்டோம். அதிக எண்ணிக்கையில் அரசு செட்டாப்பாக்ஸ்களை இயக்கநிலைக்கு கொண்டுவரும் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவோம். அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.

ஆபரேட்டர்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக, அரசு கேபிள் டிவி நிறுவன தாசில்தார் முரளி தெரிவித்தார்.

Advertisement