ஆசிரியருக்கு வெளிநாடு அனுமதி; சி.இ.ஓ.,க்கள் வழங்க எதிர்பார்ப்பு: நடைமுறையில் வேண்டும் எளிமை
மதுரை; கல்வித்துறையில் ஆசிரியர், அலுவலர்கள் வெளி நாடுகள் செல்வதற்கான அனுமதி சி.இ.ஓ., அளவில் வழங்கும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், அலுவலர்கள் சுற்றுலா, மருத்துவ தேவை, சொந்த விஷயமாக வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்கள் வழியாக சி.இ.ஓ., பரிந்துரைத்து சென்னையில் உள்ள இயக்குநரிடம் அனுமதி (என்.ஓ.சி.,) பெற வேண்டும். இதற்காக விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்குள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் பயணத்தின் அவசரம் கருதி சம்பந்தப்பட்ட ஆசிரியர், அலுவலர்கள் சென்னை சென்று தங்கள் நிலைமையை எடுத்துக்கூறி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்களே இதற்கான அனுமதி அளிக்கும் வகையில், நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை கூறியதாவது:
வருவாய் உள்ளிட்ட பிற துறைகளில், அந்தந்த மாவட்ட உயர் அதிகாரிகளே இதற்கான அனுமதியை வழங்குகின்றனர்.
அதுபோல் கல்வித்துறையிலும் மாவட்ட உயர் அதிகாரியான சி.இ.ஓ.,க்களே இந்த அனுமதியை வழங்கும் வகையில் எளிமையாக்க வேண்டும். இதனால் ஆசிரியர்களின் அலைச்சல் தவிர்க்கப்படும் என்றார்.