காடு, மலை கடந்து கழுதை மீது பயணம்; வழியெல்லாம் பிணங்கள்; சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர் கண்ணீர்

37


அமிர்தசரஸ்:சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதால் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள், ஏஜெண்டுகளால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் சட்டவிரோதமாக அந்த நாட்டில் குடியேறியவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்.
அதன்படி சட்டவிரோதமாக சென்ற இந்தியர்களையும் திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்கா துவங்கியது. பஞ்சாப் அமிர்தசரஸில் அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம் 104 இந்தியர்கள் நேற்று தாயகம் வந்து அடைந்தனர்.


அப்படி வந்தவர்கள், பல்வேறு இன்னல்களை சந்தித்து அமெரிக்கா சென்றது குறித்த சில தகவல்களை பகிந்து கொண்டனர். குறிப்பாக, ஏஜென்ட்டுகளிடம் ரூ.50 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துவிட்டதாகவும் கண்ணீர் விட்டுள்ளனர்.


பஞ்சாப்பின் தஹ்லி கிராமத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் கூறுகையில், 'அமெரிக்காவில் வேலை விசா வாங்குவதற்காக ஏஜென்ட்டுக்கு ரூ.42 லட்சம் கொடுத்தேன். கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை. டில்லியில் இருந்து கத்தார் வழியாக பிரேசில் சென்றேன். அங்கு பெருவில் விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார். ஆனால், அப்படி ஏதும் செய்யவில்லை. மாறாக, டேக்ஸி மூலம் கொலம்பியா, பனாமாவுக்கு சென்றேன். அங்கு கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இதையடுத்து, மலைப் பகுதிகளில் நடந்து சென்றோம். அங்கு மெக்சிகோ எல்லைக்கு சிறிய படகில் பயணித்தோம். என்னுடன் வந்தவர்கள் செல்லும் வழியில் உயிரிழந்தனர்,' எனக் கூறினார்.

தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த சுக்பால் சிங் இதேபோன்ற சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ' கடலில் 15 மணிநேரம் பயணித்தோம். 40 முதல் 45 கி.மீ., மலைகளில் நடந்து சென்றோம். காடு, மலைகளைக் கடந்து கழுதைகளில் பயணிக்கும் நிலையும் இருக்கிறது.


பயணத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், அவர்களை அங்கேயே விட்டு விட்டு சென்று விடுவார்கள். அவர்கள் அப்படியே கிடந்து சாக வேண்டியதுதான். இப்படி போகும் வழியெங்கும் பிணங்களாக இருந்தன. எங்களை மெக்சிகோ எல்லையில் இருள் நிறைந்த சிறையில் 14 நாட்கள் அடைத்து வைத்தனர். சூரிய ஒளியைக் கூட நாங்கள் பார்க்கவில்லை. அங்கு பஞ்சாப்பை சேர்ந்த நிறைய பேர் இருந்தனர்,' என்றார்.

Advertisement