எதிர்க்கட்சிகள் கடும் அமளி; லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

10


புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, லோக்சபாவை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.


பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31ம் தேதி துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.



இந்நிலையில், இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் கூடின. அவை கூடியதும், இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். நாடு கடத்தப்பட்டவர்கள், கைவிலங்கு போட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டதாகவும், எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர்.



இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.பின்னர் பார்லிமென்ட் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.



பின்னர் 12 மணிக்கு லோக்சபா கூடியது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சில நிமிடங்களில் லோக்சபாவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். மீண்டும் 12 மணிக்கு ராஜ்யசபா கூடி நடந்து வருகிறது. நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக, பகல் 2 மணிக்கு ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்



பார்லிமென்ட் வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.


அப்போது, அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement