விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு: அண்ணாமலை கேள்வி

17


சென்னை: வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது தி.மு.க.,. விவசாயிகளை தி.மு.க., அரசு வஞ்சிக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.


அவரது அறிக்கை:



எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகப், பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு. தி.மு.க., ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை என பொதுமக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.



கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தார். நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக. கடந்த ஆண்டு, விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக அரசிடம் நிதி இல்லை. சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என ஆணவமாகப் பேசினார்.



பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சிறு, குறு விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா? கடந்த நான்கு ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது தி.மு.க., பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை, நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.,வின், கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement