மக்கள் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு; மூடப்பட்ட தொண்டு நிறுவனம் பற்றி எலான் மஸ்க் விமர்சனம்!

2


வாஷிங்டன்: யுஎஸ்எய்ட் தொண்டு நிறுவனத்தின் மூலம் யார் யாருக்கு என்ன தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்த தொழிலதிபர் எலான் மஸ்க், 'மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமான வகையில் செலவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.


யு.எஸ்.எய்ட் (USAID) என்பது அமெரிக்க அரசின் 100 சதவீதம் நிதியுதவி மூலம் நடத்தப்படும் சர்வதேச தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் வேலை பார்க்கின்றனர்.
இதன் மூலம் உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகள், வளர்ச்சிப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இதற்கென ஆண்டுக்கு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் (50 பில்லியன் டாலர்), அமெரிக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது.


ஆனால், இவ்வாறு ஒதுக்கப்படும் தொகை, உதவி தேவைப்படுவோருக்கு செலவிடப்படுவதில்லை. தவறான செயல்களுக்கு, தவறான முறையில் செலவிடப்படுவதைாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், திறன் மேம்பாட்டுத்துறை தலைவரான தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றம் சாட்டினர்.
இதன் தொடர்ச்சியாக, சில நாட்களுக்கு முன், யுஎஸ்எய்ட் தொண்டு நிறுவனம் மூடப்பட்டது. அதில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும்வரை பணிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிதி, எந்தெந்த வகையில் செலவழிக்கப்பட்டது என்பதை எலான் மஸ்க் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தனர்.
அதில் தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. குறிப்பாக, 2023ல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, இனவெறி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் வவ்வால் வைரஸ் குறித்த ஆய்வுக்கு 5 மில்லியன் டாலர்களும், அல்கொய்தா தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் உணவுக்கு 10 மில்லியன் டாலர்களும் நிதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கவுதமாலா, ஆர்மீனியா, ஜமைக்கா, உகாண்டா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஓரினசேர்க்கையாளர்களின் செயல்பாடுகளுக்கும் நிதி வழங்கப்பட்டதாக கணக்குகள் உள்ளன.

ஜார்ஜியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த 25 மில்லியன் டாலரும், பெண்ணிய ஜனநாயகக் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையில் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு 6 மில்லியன் டாலரும், அரபு மற்றும் யூத புகைப்பட கலைஞர்களுக்கு 1.3 மில்லியன் டாலரும், கஜகஸ்தானில் பொய் தகவலை பரப்புவதை தடுக்க 4.5 மில்லியன் டாலரும் ஒதுக்கப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.


இது பற்றி கருத்து தெரிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க், 'மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவு செய்யப்பட்டுள்ளது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement