மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848336.jpg?width=1000&height=625)
புதுடில்லி: மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டு மவுனமாக இருக்கலாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
'தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்' என, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ' மசோதாவை திருப்பி அனுப்பும் போது காரணத்தை கவர்னர் குறிப்பிடவில்லை. கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற மசோதா மீது அவரே நீதிபதியாக செயல்படுகிறார். ஜனாதிபதிக்கு அனுப்பும் முன்பு, அது அனுப்பக்கூடிய மசோதாவா என்பதை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும்' என வாதிடப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னர் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டால், அதன் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டு மவுனமாக இருக்கலாமா? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும்.
நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறும்போது, கவர்னர் வேறு ஆலோசனை ஏதாவது கூறியாக வேண்டுமா, ஏன்? அவர் ஒப்புதலை நிறுத்தி வைத்து விட்டார் என்பதை மாநில அரசு எப்படி தெரிந்து கொள்ளும்? ஜனாதிபதிக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும் வரை கவர்னர் அது குறித்து ஏதேனும் கூறினாரா?
மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கவர்னர் கூறினால், மறுபரிசீலனை செய்வதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? தன் ஒப்புதலை நிறுத்தி வைக்கும்போது, கவர்னர் எதுவும் கூறாத பட்சத்தில், மாநில அரசு என்ன மறுபரிசீலனை செய்ய முடியும்? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக வக்கீல் ராகேஷ் திவேதி வாதம்: இது ஜனநாயகத்தின் விளையாட்டு. கவர்னர், தன்னிடம் வழங்கப்பட்டுள்ள மசோதா எது தொடர்பானது என்பதற்கு தன் மனதை ஊன்றிச்செலுத்த வேண்டும். அவர் சட்டசபையை காட்டிலும் அதிகாரம் மிகுந்த சூப்பர் லெஜிஸ்லேச்சர் ஆக இருக்க முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
நீதிபதிகள் கூறுகையில், ''சட்டப்படி ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும்போது, அதனுடன் ஒரு குறிப்பு அல்லது செய்தியை சேர்த்து அனுப்ப வேண்டும். ஆனால், அப்படி எதுவும் கவர்னர் அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றனர். வழக்கு விசாரணை மதியத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பேற்பு
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல; ஜெய்சங்கர் விளக்கம்
-
மக்கள் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு; மூடப்பட்ட தொண்டு நிறுவனம் பற்றி எலான் மஸ்க் விமர்சனம்!
-
நெல்லையில் பிரமாண்ட சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
சரணாலயத்தில் பிறந்த ஓநாய் குட்டிகள்; வன விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு வெற்றி!