கட்சியை உடைக்க பா.ஜ., சதி: ஆம் ஆத்மி புலம்பல்

12


புதுடில்லி: ஆம் ஆத்மியை சேர்ந்த ஏழு வேட்பாளர்கள் கட்சி மாற ரூ.15 கோடி கொடுக்க பா.ஜ.,முன்வந்துள்ளது என அக்கட்சி கூறியுள்ளது.

டில்லி சட்டசபைக்கு நேற்று(பிப்.,05) ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பதிவான ஓட்டுகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.,விற்கு சாதகமாக உள்ளது. ஆனால், அதனை ஏற்க ஆம் ஆத்மி மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் மூத்த நிர்வாகி சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கு பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தால் ரூ.15 கோடி கொடுக்க தயாராக உள்ளதாக அவர்கள் கூறினர்.

ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே, பா.ஜ., தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் செய்ததைப் போல், டில்லியிலும், கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது.
பா.ஜ.,வினர் தொலைபேசியில் பேசினால், அதனை பதிவு செய்து புகார் அளிக்கும்படி கட்சியினரிடம் கூறியுள்ளோம். நேரில் சந்திக்க இருந்தால், ரகசிய கேமரா மூலம் அதனை பதிவு செய்யும்படியும் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், யார் யாரை பா.ஜ.,வினர் தொடர்பு கொண்டார் என்ற விவரத்தை வெளியிட சஞ்சய் சிங் மறுத்துவிட்டார்.

Advertisement