தேசிய விளையாட்டு: தீபிகா குமாரி 'தங்கம்'

டேராடூன்: தேசிய விளையாட்டு பீச் வாலிபால் போட்டியில் தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது. வில்வித்தையில் தீபிகா குமாரி தங்கம் வென்றார்.


உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழக அணி 2-0 (21-15, 21-11) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஆண்களுக்கான பீச் வாலிபால் பைனலில் தமிழகம், ஆந்திரா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழக அணி 0-2 (23-25, 19-21) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆந்திராவுக்கு தங்கம் கிடைத்தது.
தீபிகா 'தங்கம்': பெண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில் ஜார்க்கண்ட் அணியின் தீபிகா குமாரி, 674 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். காலிறுதியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜீத் கவுர், அரையிறுதியில் மகாராஷ்டிராவின் கதா கடகேவை வீழ்த்திய தீபிகா, பைனலில் பீகாரின் அன்ஷிகா குமாரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.


துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள்-3' பிரிவு தகுதிச் சுற்றில் மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (598.45 புள்ளி) முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் நிராஜ் குமார் (591.33 புள்ளி) 3வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய நிராஜ் குமார், 464.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பிரதாப் சிங் (462.4 புள்ளி), மகாராஷ்டிராவின் சுவப்னில் சுரேஷ் குசாலே (447.7) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
* 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான பைனலில் ஹரியானா, ராஜஸ்தான் அணிகள் மோதின. பிரமோத், சுருச்சி அடங்கிய ஹரியானா அணி 17-7 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.

Advertisement