ஸ்டாய்னிஸ் திடீர் ஓய்வு: ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸ், ஒருநாள் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மார்கஸ் ஸ்டாய்னிஸ் 35. கடந்த 2015ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 71 ஒருநாள் (1495 ரன், 48 விக்கெட்), 74 சர்வதேச 'டி-20' (1245 ரன், 45 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை (2021ல் 'டி-20', 2023ல் 50 ஓவர்) வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார்.
பாகிஸ்தான், துபாயில் நடக்கவுள்ள ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான (பிப். 19-மார்ச் 9) ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார் ஸ்டாய்னிஸ். இந்நிலையில் நேற்று, ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 'எஸ்.ஏ.20' தொடரில் டர்பன் அணிக்காக விளையாடும் இவருக்கு, தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் குணமடைய நீண்ட நாள் தேவைப்படும் என்பதால் ஓய்வு பெற்றிருக்கலாம்.
ஸ்டாய்னிஸ் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவது ஒரு சிறந்த பயணம். இதற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்,'' என்றார்.
கம்மின்ஸ் விலகல்
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன் கம்மின்ஸ் (கணுக்கால்), ஹேசல்வுட் (காலின் பின்பகுதி) காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே முதுகு வலியால் 'ஆல்-ரவுண்டர்' மிட்சல் மார்ஷ் விலகினார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமையலாம். கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் நியமிக்கப்படலாம்.