யார் பார்த்த வேலை இது: நகராட்சி கமிஷனர் அறையில் ரகசிய கேமராவால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறையில் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கமிஷனர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் உள்ளது. கமிஷனராக கிருஷ்ணமூர்த்தி உள்ளார். நகராட்சி தலைவர் பரிதா. இவரது கணவர் நவாப், நகர தி.மு.க., செயலாளராக உள்ளார். இவர், நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கமிஷனர் அறையில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், கடந்த 25ம் தேதி நவாப், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் காரசார விவாதம் நடப்பதும், அதனை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி சமாதானம் செய்யும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து ரகசிய கேமரா வைத்தது யார், வேறு எங்கெல்லாம் கேமரா வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கும்படி கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். கமிஷனர் அறையிலேயே மர்ம நபர்கள் ரகசிய கேமரா வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.