'சூப்பரா' சுப்மன்... ஜோரா இந்தியா * வீழ்ந்தது இங்கிலாந்து அணி

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜோராக வெற்றி பெற்றது. சூப்பராக பேட்டிங் செய்த சுப்மன் 87 ரன் விளாசினார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா எனு இருவர் அறிமுகம் ஆகினர்.
நல்ல துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், டக்கெட் ஜோடி துவக்கம் தந்தது. ஹர்ஷித் வீசிய போட்டியின் 6வது ஓவரில் 6, 4, 6, 4, 6 என மொத்தம் 26 ரன் விளாசினார் சால்ட். அக்சர் ஓவரில் இருவரும் 3 பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து, 8 ஓவரில் 71 ரன் குவித்தது. இந்நிலையில் சால்ட் (43) ரன் அவுட்டாக, திடீர் திருப்பம் ஏற்பட்டது.
10 வது ஓவரை வீசிய ஹர்ஷித், 3வது பந்தில் டக்கெட் (32), கடைசி பந்தில் புரூக்கை 'டக்' அவுட்டாக்கினார். அடுத்து பட்லர், அனுபவ ஜோ ரூட் இணைந்து போராடினர். இந்நிலையில் பந்தை சுழற்றிய ஜடேஜா, ரூட்டை (19) வெளியேற்றினார்.
இரு அரைசதம்
பின் பட்லருடன் இணைந்தார் ஜேக்கப் பெத்தெல். பட்லர் அரைசதம் எட்டினார். இவர் 52 ரன் எடுத்த போது, அக்சர் படேல் சுழலில் சிக்கினார். மீண்டும் வந்த ஹர்ஷித், இம்முறை லிவிங்ஸ்டனை (5) திருப்பி அனுப்பினார். கார்சை (10) ஷமி போல்டாக்கினார்.
ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் எட்டிய பெத்தெலை (52), ஜடேஜா அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்ஷித் 3, ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தனர்.
ஸ்ரேயாஸ் விளாசல்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்னில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 2 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்தனர். ஆர்ச்சர் ஓவரில் அடுத்தடுத்த சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், 30 வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 19 வது அரைசதம். மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது, ஸ்ரேயாஸ் (59) அவுட்டானார்.
சுப்மன் அபாரம்
சுப்மனுடன் இணைந்த அக்சர் படேல், பவுண்டரிகளாக விளாசினார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த சுப்மன் கில், ஒருநாள் அரங்கில் 14வது, இங்கிலாந்துக்கு எதிராக முதல் அரைசதம் எட்டினார். அக்சர் தன் பங்கிற்கு சொந்த மண்ணில் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் அரைசதம் கடக்க, இந்திய அணி வெற்றியை வேகமாக நெருங்கியது.
4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது, அக்சர் (52) அவுட்டானார். அடுத்து வந்த ராகுல் (2) நிலைக்கவில்லை. அடுத்த சில நிமிடத்தில் சுப்மனும் (87) திரும்பினார். கடைசியில் ஜடேஜா 2 பவுண்டரி அடிக்க, இந்திய அணி 38.4 ஓவரில் 251/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஜடேஜா (12), பாண்ட்யா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜடேஜா '600'
சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில் 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார் ஜடேஜா. இவர் 80 டெஸ்டில் 323, 198 ஒருநாள் போட்டியில் 223, 74 'டி-20'ல் 54 விக்கெட் சாய்த்துள்ளார். இந்த இலக்கை எட்டிய ஆறாவது இந்திய பவுலர் ஆனார். இதற்கு முன் கும்ளே (956), அஷ்வின் (765), ஹர்பஜன் (711), கபில்தேவ் (687), ஜாகிர் கான் (610) இதுபோல அசத்தினர்.
'டாப்-6' இந்திய பவுலர்கள் விபரம்:
வீரர் போட்டி விக்கெட்
கும்ளே 403 956
அஷ்வின் 287 765
ஹர்பஜன் 367 711
கபில் தேவ் 356 687
ஜாகிர் கான் 309 610
ஜடேஜா 352 600
* ஸ்ரீநாத் (296ல் 551), முகமது ஷமி (191ல் 452), பும்ரா (204ல் 443) 7, 8, 9வது இடத்தில் உள்ளனர்.

ஆண்டர்சனை முந்தினார்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர் வரிசையில் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் ஜடேஜா. இவர் 27 போட்டியில் 42 விக்கெட் சாய்த்துள்ளார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் (31ல் 40), பிளின்டாப் (30ல் 37), இந்தியாவின் ஹர்பஜன் சிங் (23ல் 36), ஸ்ரீநாத் (21ல் 35), அஷ்வின் (23ல் 35) அடுத்தடுத்து உள்ளனர்.

ஹர்ஷித் ராணா சாதனை
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன இவர், முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.
* சமீபத்தில் புனே 'டி-20'ல் (எதிர்-இங்கிலாந்து) அறிமுகம் ஆன ஹர்ஷித், 3 விக்கெட் வீழ்த்தினார்.
* நேற்று நாக்பூர் ஒருநாள் போட்டியில் (இங்கிலாந்து) அறிமுகம் ஆனார். இதில் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் ஹர்ஷித்.

பெத்தெல் அபாரம்
இந்திய மண்ணில் அரைசதம் அடித்த இளம் இங்கிலாந்து வீரர் ஆனார் ஜேக்கப் பெத்தெல் (21 வயது, 106 நாள்). இதற்கு முன் 2013ல் ஜோ ரூட், 22 வயது, 24வது நாளில் 57 ரன் (மொகாலி) எடுத்திருந்தார்.

Advertisement