நாய்களோடு அதிக நெருக்கம் வேண்டாம்!
சல்மோனெல்லோசிஸ் (Salmonellosis) என்ற நோயை சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா கிருமி ஏற்படுத்துகிறது. இந்தக் கிருமி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்.
பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, சரியாகக் காய்ச்சப்படாத பால் இவற்றை உண்பதால் மட்டுமே இந்தக் கிருமி நம் உடலுக்குள் செல்லும் என்று பொதுவாக நம்பப்பட்டு வந்தது.
ஆனால், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலை மேற்கொண்ட தற்போதைய ஆய்வில், சல்மோனெல்லா பாக்டீரியா என்ற நோய், வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்களிடமிருந்தும் மனிதர்களுக்குப் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிலர் வீட்டுக்கு காவல் இருக்கும் நாயை வாசலில் மட்டுமே கட்டி வைத்திருப்பர். சிலர் தங்கள் வீட்டின் எல்லா பகுதிகளிலும் நாயை அனுமதிப்பர். நாய்களை தொட்ட பின் கைகளைக் கழுவாமல் இருந்தாலும் அவற்றில் இருக்கும் கிருமி நமக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது.
அந்த பாக்டீரியா நம் உடலுக்குள் நுழைந்தால், முதலில் குடல் சுவரைத் தாக்கும். நாம் உட்கொள்ளும் நீரையும், உணவில் உள்ள திரவப் பொருட்களையும் நம் குடலால் உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகும். இதனால் வாந்தி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.
பல்கலை ஆய்வாளர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள், நாய்கள் குறித்த மருத்துவ அறிக்கைகளைப் படித்தனர். அப்போது நாய்களோடு அதிக நெருக்கமாகப் பழகியவர்களுக்கு இந்தத் தொற்று எளிதாக ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
நம் அன்புக்குரிய விலங்குகளாக இருந்தாலும் நாய்களோடு விளையாடிய பின்னர் நம் உடலைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நோயிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.