நிதிநிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் செய்தவர் கைது

தேனி:தேனியில் நிதிநிறுவனத்தில் ரூ.1.01 கோடி கையாடல் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த சாமிராஜாவை 45, போலீசார் கைது செய்தனர்.

தேனி பெரியகுளம் ரோட்டில் தனியார் நிதிநிறுவனம் உள்ளது. இதன் கிளைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன.

இங்கு பொது மக்களுக்கு கடன் வழங்கி வட்டியுடன் வசூல் செய்யப்படும். தேனி அருகே ஆதிபட்டியை சேர்ந்த அருண்பாபு 37, தேனி மாவட்ட மேற்பார்வையாளராக பணி புரிந்தார். இவரின் பணி, வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகையை வசூல் செய்து நிறுவன தலைமை அலுவலக வங்கிக்கணக்கில் செலுத்துவது.


களப்பணியாளர்கள் திலகராஜ், மகேஸ்வரன் வசூல் செய்து கொடுத்த பணத்தையும், அருண்பாபு வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூல் செய்த பணமும் சேர்த்து ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 863 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்து தலைமறைவானார்.


நிதிநிறுவன மாவட்ட மேலாளர் மோகன்ராஜ் 2019ல் தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அருண்பாபு 37, மனைவி ஜெயலதா 32, தாய்மாமா காமுத்துரை, மைத்துனர் சாமிராஜா ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அருண்பாபு கைதாகி நிபந்தனை ஜாமினில் உள்ள நிலையில் நேற்று சாமிராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Advertisement