பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
பூண்டி:பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது மஞ்சாகுப்பம் கிராமம். இங்கு, திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அரசு நடுநிலைப் பள்ளி 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில், சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் அடைந்தும், உடைந்தும் உள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக உள்ளது. பாதுகாப்பு இல்லாத காரணத்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில், சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, நாசம் செய்கின்றனர். சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுவதை கட்டுப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், சேதமடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.