காலிப்பணியிடங்களை நிரப்ப கலையாசிரியர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்:தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து விருதுநகரில் சங்க மாவட்ட தலைவர் தங்கப்பாண்டியன் கூறியதாவது: அரசு பள்ளிகளில் கலையாசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளது. தற்போது ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணியில் உள்ளனர். கலை தொடர்பான படிப்பில் மாணவர்கள் ஆர்வம் இருந்தாலும் அதை நிறைவேற்ற ஆசிரியர்கள் இல்லாத சூழல் உள்ளது. எனவே அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்.

சென்னை, கும்ப கோணம் மாவட்டங்களில் நாடு சுதந்திரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட இரு அரசு ஓவிய கல்லுாரிகள் மட்டுமே தற்போது வரை செயல்படுகின்றன. அதற்கு பிறகு ஒவிய கல்லுாரிகள் துவங்கப்படவில்லை.

மதுரையில் துவங்குவதாக கடந்த பட்ஜெட்டில் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தொகை பெருகி விட்ட நிலையில் கலை ஆர்வம் கொண்டோரும் அதிகரித்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு ஒரு ஓவிய கல்லுாரி துவங்குவது சரியாக இருக்கும். எல்லா பகுதிகளிலும் கலை தொடர்பான கல்விகள் பயிற்றுவிப்பது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு குறித்து நம்பிக்கையை அளிக்கும்.

ஆசிரியருக்கான பயிற்சி ஆண்டுதோறும் நடத்துவர். அதை நீண்ட காலமாக நடத்தாமல் உள்ளனர். ஓவிய ஆசிரியருக்கான பயிற்சி, வருடாந்திர தேர்வுகள் நடத்தவும் அரசு முன்வர வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement