திருப்பரங்குன்றம் விவகாரம் திருப்பதி பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பதி:திருப்பதி வேளாண் பல்கலையில், சக்தி வாய்ந்த, இரண்டு 'பைப்' வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வேளாண் பல்கலைக்கு நேற்று காலை 8:45 மணிக்கு இ - மெயில் ஒன்று வந்தது. 'ஸ்வாதி பிலால் மாலிக்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மெயிலில், பல்கலை வளாகத்தில் சக்திவாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கவே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வெடிகுண்டுகளின் ஒயர் இணைப்பு பணிகள் சென்னை அண்ணா பல்கலையின் மெக்கானிக்கல் துறையில் வைத்து செய்யப்பட்டதாகவும், இன்றே வெடிகுண்டு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி குறித்து பொருத்தமற்ற தகவல்களும் அந்த மெயிலில் இடம் பெற்றிருந்தன.

Advertisement