வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு

3

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் தண்ணீர் தொட்டியில், மனித மலம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை மூடி மறைக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், உணவுப்பொருள் கழிவு என கூறப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின், 20வது வார்டில், காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு வளையல்கார தெருவில், மாநகராட்சி சார்பில் வீட்டு உபயோகத்துக்கான, 5,000 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றியும், அதன் உயரத்துக்கு மேலும் வீடுகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தண்ணீர் தொட்டி மீது, பிளாஸ்டிக் பையில் வைத்து மனித மலத்தை, யாரோ வீசியுள்ளனர். வீசிய வேகத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்த மலம், தண்ணீர் தொட்டி மீதும், தண்ணீருக்குள்ளும் விழுந்துள்ளது.

இதுகுறித்து அந்த வார்டு தி.மு.க., கவுன்சிலர் சங்கருக்கு தகவல் கிடைத்ததும், அவசரம், அவசரமாக மாநகராட்சி துப்புரு பணியாளர்களை வரவழைத்து, தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொட்டியை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து விட்டார்.

ஆனால், நேற்று முன்தினம் அங்கு சென்று பார்த்தவர்கள், அதை மனித மலம் என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், திருச்சி மாநகராட்சி நிர்வாகம், தொட்டியில் வீசப்பட்டது உணவுப்பொருட்களின் கழிவு தான் என்றும், மனித கழிவு இல்லை என்றும் மறுத்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்த வார்டின் தி.மு.க., கவுன்சிலர் சங்கர், கோட்டை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், 'மலம் வீசப்படாத நிலையில், தேவையில்லாமல் சிலர் பிரச்னையை கிளப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement