வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'மற்றவர்களின் உணர்வுகளை அவமதித்து, அவர்களை துாண்டுவது போன்ற கருத்துக்களை பேசக்கூடாது' என, சீமானுக்கு அறிவுரை வழங்கும்படி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மறுத்து விட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில், 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., செயலர் ரமேஷ் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, சீமான் மீது கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.அந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால்தான், வழக்கில் இருந்து விடுவிக்க, விசாரணை நீதிமன்றம் மறுத்துள்ளது,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:

மனுதாரர் மீது தொடரப்பட்டது அரசியல் வழக்கா, இல்லையா என்பது, கடந்த ஆறு மாதங்களாக, அவர் பேசியதில் இருந்தே தெரியும். பிறரை துாண்டும் வகையில் தான் தினமும் பேசுகிறார். அதனால் தான் புதுப்புது வழக்குகள் தொடரப்படுகின்றன.

முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இவ்வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்க, எந்த ஆதாரங்களும் இல்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

உடனே, 'வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்' என, சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை நிராகரித்த நீதிபதி கூறியதாவது:

தனிப்பட்ட நபர்களை துாண்டும் விதமாக, சீமான் கருத்துகளை தெரிவித்து வருகிறார். பேச்சு உரிமையை, அரசியல் சாசனம், சில கட்டுப்பாடுகளுடன் தான் வழங்கி இருக்கிறது. யாரும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது. அடுத்தவர்களின் உணர்வுகளை அவமதித்து, அவர்களை துாண்டுவது போன்ற கருத்துக்களை, சீமான் பேசக்கூடாது என, அவருக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானால் தான், அவர் என்ன பேசினார் என்பது தெரியவரும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement