எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848829.jpg?width=1000&height=625)
புதுடில்லி: யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு, பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உயர் கல்வியின் தரத்தை நிர்வகிக்க ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு புதிய வரைவு விதிகளை வெளியிட்டது. தற்போது, 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அமலில் உள்ளன.
இந்த வரைவு விதிகளை காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் நேற்று கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சில அரசியல் தலைவர்கள் முற்போக்கான கல்விச் சீர்திருத்தங்களை, தங்கள் காலாவதியான அரசியலுக்காக கற்பனை அச்சுறுத்தல்களை முன் வைப்பது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது.
யு.ஜி.சி., வரைவு விதிமுறைகள் யாருடைய குரலையும் நசுக்கவில்லை; அனைவரின் கருத்துகளையும் கேட்கிறது. நம் கல்வி நிறுவனங்களை பலப்படுத்துகிறது; பலவீனப்படுத்தவில்லை. நிறுவன சுயாட்சியையும், நம் மொழியியல் பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது.
ராகுல் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பவர்களாக கூறிக் கொள்பவர்கள் இதில் அரசியல் செய்வதற்கு முன், சிறிது நேரத்தை ஒதுக்கி வரைவு விதிகளை படித்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
யு.ஜி.சி., கடந்த மாதம் வெளியிட்ட ஆசிரியர் தேர்வுக்கான வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க, பொது மக்களுக்கு பிப்., 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பலரும் வரைவு அறிக்கையை முழுதாக படித்து கருத்து தெரிவிக்க மேலும் அவகாசம் தேவை என கூறினர். அதை ஏற்று, யு.ஜி.சி., செயலர் காலக்கெடுவை வரும் 28 வரை நீட்டித்துள்ளார்.