நந்தவன குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் உள்ள, சந்தை வளாகம் அருகே நந்தவன குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இக்குளம் முறையான பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருந்தது. இதை, கடந்த 2019 ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டத்தின் கீழ், 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

தற்போது, இந்த குளம் பராமரிப்பு இல்லாமலும், ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால், குளத்தின் நீர் மாசடைந்து, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. எனவே, நந்தவன குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement