தோரணவாயில் இடிந்து விழுந்ததால் வயலுார் முருகன் கோவிலில் பரபரப்பு

திருச்சி:திருச்சி, வயலுார் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் புதிதாகக் கட்டப்படும் தோரண வாயில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு, முருக பெருமான் அருள்பாலித்த திருத்தலம் திருச்சி, வயலுார் முருகன் கோவில். பிரசித்தி பெற்ற கோவிலில், 30 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடக்கிறது.

வரும் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சோமரசம்பேட்டை பிரதான சாலையில் இருந்து, வயலுார் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த தோரண வாயில் இடிக்கப்பட்டு, புதிய தோரண வாயில் கட்டும் பணி நடைபெறுகிறது.

சாரம் கட்டி, 15 அடி உயரத்தில் கட்டப்பட்ட பில்லர்களை இணைக்கும் வகையில், தோரண வாயிலின் வளைவுப்பகுதியை கட்டும் பணி நேற்று நடந்தது. அப்போது, திடீரென சாரத்துடன் பில்லர்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது, பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடியதால், அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இருப்பினும், முருகன் கோவில் தோரண வாயில் இடிந்தது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கும்பாபிஷேகம் நெருங்குவதால், கான்கிரீட் கலவை காய்ந்து இறுகுவதற்கு முன், அவசரமாக கட்டுமானப்பணி மேற்கொண்டதால், தோரண வாயில் இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement