‛கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் விழுந்து பெண் பலி; இழப்பீடுக்கு உத்தரவு
மதுரை:கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு கவிழ்ந்து பெண் பலியானதற்கு இழப்பீடு கோரிய வழக்கில், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை, அம்மானிப்பட்டு சாமிக்கண்ணு தாக்கல் செய்த மனு:
கடந்த 2021 ஏப்., 27ல் உறவினர் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு, என் மனைவி விஜயராணி, உறவினர் ஒருவருடன் டூ - வீலரில் அம்மானிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மேட்டுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு, என் மனைவி தலையில் விழுந்தது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மனைவி இறந்தார்.
கோவை, சென்னையில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டன. சாலை மற்றும் இதர இடங்களில் பிளக்ஸ் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து, சில வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. கலெக்டர் மற்றும் இதர அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரரின் மனைவி அவ்வழியாக சென்றபோது, பலத்த காற்று வீசியதால், பிளக்ஸ் போர்டு அவர் மீது விழுந்தது. அந்த பிளக்ஸ் போர்டை நிரந்தரமாக அமைக்கவில்லை. ஒருவரின் தந்தை இறந்த பின், அவரது மகன் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டை, கலெக்டரிடம் அனுமதி பெறாமல் திடீரென நிறுவினார்.
இதை கலெக்டர் ஆய்வு செய்ய வாய்ப்பில்லை. பிளக்ஸ் போர்டை நிறுவியவர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். எனவே, கலெக்டரின் அலட்சியத்தால் மனுதாரரின் மனைவி இறந்ததாகக் கூற முடியாது.
எனினும், சூழ்நிலையை கருதி, மனுதாரருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை 2 லட்சம் ரூபாயை, வருவாய்த் துறை செயலர் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.