போலி முகவரியில் சரக்கு ஏற்றுமதி 1,775 கிலோ பொருட்கள் நிறுத்தம்
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இருந்து, போலி முகவரியுடன், மலேஷியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த, 1,775 கிலோ பொருட்களை, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு முனையம் உள்ளது.
இங்கிருந்து, பல நாடுகளுக்கு காய்கறிகள், ஆடைகள், கவரிங் நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெளிநாடுகளுக்கு பொருட்கள் கடத்தும் நபர்கள், சென்னையில் இருந்து, திருச்சி விமான நிலையத்தின் சரக்கு முனையத்திற்கு பொருட்களை எடுத்து வந்து, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக, மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், திருச்சி விமான நிலைய சரக்கு முனையத்தில் நேற்று சோதனை நடத்தினர்.
அதில், திருச்சியில் இருந்து, போலி முகவரியுடன், 1,775 கிலோ சரக்குகள் மலேஷியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருந்ததைக் கண்டறிந்தனர்.
அந்த சரக்குகளை, சரக்கு முனையத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர். இதுவரை, எவ்வளவு பொருட்கள் போலி முகவரியுடன் அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.