பேரூராட்சிகளில் எல்.இ.டி. விளக்குகள் மாற்றுவதில் சிக்கல் டெண்டர் பெற்ற நிறுவனம் பாராமுகம்

கம்பம் தேனி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் எல். இ. டி. விளக்குகள் பொருத்த டெண்டர் பெற்ற நிறுவனம், கடந்த மாதம் பல்புகளையும், பிட்டிங்குகளையும் இறக்கி வைத்து விட்டு சென்றது. எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி யார் மேற்கொள்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை 14.-10.-2022ல் பிறப்பித்த உத்தரவின்படி பேரூராட்சிகளின் ஆணையரகம் உத்தரவை செயல்படுத்த அனுமதித்தது. மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற டெண்டர் 2023 ஜனவரியில் அப்போதைய உதவி இயக்குநரால் விடப்பட்டது. ரூ.4 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் , 7236 எல்.இ.டி. விளக்குகள் புதிதாக பொருத்த தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. ஆனால் டெண்டர் பெற்ற நிறுவனம் 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் பொருந்தும் பணிமேற்கொள்ளவில்லை.

நகராட்சி நிர்வாக உத்தரவின்படி பேரூராட்சி நிர்வாகங்கள், தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பிற்கென தனியாக மின் பொருள்கள் வாங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பேரூராட்சிகளில் கடத்த 2 ஆண்டுகளாக பழுதடைந்த தெருவிளக்குகளை பழுது நீக்குவதில் தொடர்ந்த சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் பணிகளை துவக்காத நிலையில், கடந்த மாதம் டெண்டர் பெற்ற நிறுவனம், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் அனுமதிக்கப்பட்ட அளவு எல். இ.டி. பல்புகள் மற்றும் பிட்டிங்குகளை இறக்கி வைத்தது. ஆனால் இந்த பல்புகளை யார் பொருத்துவது என்பது தெரியாத நிலை உள்ளது. டெண்டர் பெற்ற நிறுவனம் எந்த தொடர்பு இன்றி உள்ளது. விரைவில் எல்.இ.டி.,விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெறும் என்று பேரூராட்சிகள் கூறுகின்றன. ஆனால் யார் இந்த பணியை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்பு என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 பேரூராட்சிகளில் தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி முடங்கி உள்ளது.

இது குறித்து விசாரித்த போது, பிட்டிங் பணிகளை டெண்டர் பெற்ற நிறுவனம் தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வேறு வழியின்றி பேரூராட்சிகளில் சிலர் அந்த பணியை மேற்கொள்கின்றனர். 7 ஆண்டுகள் பராமரிப்பு செய்து தர வேண்டும் என்பதும் நிபந்தனையாகும். ஆனால் டெண்டர் பெற்ற நிறுவனம் கண்டு கொள்ளாமல் உள்ளது, என்கின்றனர்.

Advertisement