அமெரிக்காவில் இருந்து வரும் பிற நாட்டவர்களையும் ஏற்பதாக கவுதமாலா அதிபர் அறிவிப்பு

கவுதமாலா சிட்டி: 'அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் டிரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில், அங்கிருந்து பிற நாட்டவர்கள் வந்தாலும் ஏற்போம்' என, கவுதமாலா அதிபர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோதமாக நாட்டில் வசிப்பவர்களை வீடு வீடாக சென்று சோதனை செய்து கண்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ரூபியோ, மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அமெரிக்காவில், இந்நாட்டைச் சேர்ந்த அதிகம் பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பைடன் ஆட்சியில் மட்டும் 66,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை டிரம்ப் அரசில் அதிகரிக்க உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர், கவுதமாலா அதிபர் பெர்னார்டோவிடம் பேச்சு நடத்தினார்.

அதில், நாடு கடத்தப்படும் கவுதமாலா நாட்டவர்கள் மற்றும் பிற நாட்டவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் அதிகரிக்க அதிபர் பெர்னார்டோ ஒப்புக்கொண்டார். அமெரிக்காவிலிருந்து வரும் பிற நாட்டவர்களையும் ஏற்பதாக தெரிவித்தார். இதனை பாராட்டிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, கவுதமாலாவிற்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கும் என குறிப்பிட்டார்.

Advertisement