வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை! முஜிபுர் ரஹ்மானின் வீடு தீயிட்டு எரிப்பு

டாக்கா: வங்கதேச நிறுவனரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு, போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சித் தலைவர்களின் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது, நாட்டின் பல பகுதிகளிலும் பரவி வன்முறை சம்பவங்களாக மாறின.

தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசார் - மாணவர் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில், 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ரகசியம்

அரசுக்கு எதிராக கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, கடந்த ஆக., 5ல் நாட்டைவிட்டு வெளியேறினார். அவர், நம் நாட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டாலும், ஷேக் ஹசீனா இருக்குமிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது, 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மேற்கொண்டதாக, அவரது அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மீதும் வழக்குகள் பதிவாகின. அவர்களுக்கு எதிராக கைது வாரன்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், வங்கதேசத்தில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் போட்டியிட அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்படாது என்று இடைக்கால அரசு அறிவித்தது.

இதையடுத்து, தன் கட்சி தொண்டர்களுடன் ஷேக் ஹசீனா நேற்று முன்தினம் இரவு ஆன்லைன் வாயிலாக பேசினார்.

அப்போது, இடைக்கால அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வங்கதேசத்தில் பரவியதை அடுத்து, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரண்ட 1,000க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர், தலைநகர் டாக்காவில் பேரணியாக சென்றனர்.

தான்மோண்டி பகுதியில் உள்ள வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும், முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டை அவர்கள் முற்றுகையிட்டு சூறையாடினர்.

சிதைப்பு

தற்போது அருங்காட்சியகமாக உள்ள அங்கு, புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை சேதப்படுத்தினர். பின்னர், வீட்டை தீயிட்டு எரித்ததுடன், புல்டோசரை வைத்து தரைமட்டமாக்கினர்.

அதே பகுதியில் இருந்த ஷேக் ஹசீனாவின் வீடும் போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இரையானது. அவரின் உறவினர்களும், முன்னாள் எம்.பி.,க்களுமான ஷேக் ஹெலால் உதீன், ஷேக் சலாவுதீன் ஜூவல் ஆகியோரின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்களின் ஒரு பகுதியாக, அவாமி லீக் கட்சித் தலைவர்களின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

சிட்டகாங் மருத்துவக் கல்லுாரி, ஜமால் கான் பகுதி, ரங்பூர் ரோகிய பல்கலை உட்பட பல்வேறு இடங்களில் இருந்த அவரின் சுவரோவியங்கள் சிதைக்கப்பட்டன.

ஒரு நாள் முழுதும் நீடித்த வன்முறை சம்பவங்களால், தலைநகர் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.

'வரலாற்றை அழிக்க முடியாது'

தாக்குதல்களை கண்டித்து சமூக வலைதளம் வாயிலாக தன் கண்டனத்தை பதிவு செய்த ஷேக் ஹசீனா கண்ணீர் மல்க கூறுகையில், “வங்கதேச மக்களிடம் நீதி கேட்கிறேன். நான் நாட்டுக்காக எதையும் செய்யவில்லையா? பிறகு எதற்காக என்னை இப்படி அவமதிக்க வேண்டும்? என் தந்தையின் நினைவாக இருந்த ஒரே வீட்டையும் அழித்து விட்டனர்.இதற்கு பின்னால் யார் இருக்கின்றனர்? ஏன் இந்த தொடர் தாக்குதல்? அடையாளங்களையும், கட்டமைப்பையும் அழிக்கலாம். ஆனால், வரலாற்றை அழிக்க முடியாது. நிச்சயம் இதற்கு ஒருநாள் எதிரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்றார்.



இந்தியாவிடம் வலியுறுத்தல்

டாக்காவில் செயல்படும் இந்திய துாதரகத்தில் உள்ள அதிகாரியிடம், வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் ஷேக் ஹசீனாவின் தவறான மற்றும் புனையப்பட்ட கருத்துகளாலேயே வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதுாக்கியுள்ளன. அவரது பேச்சு மற்றும் அறிக்கைகள் எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்றன.இது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆரோக்கியமான உறவுகளுக்கு உகந்தவை அல்ல. எனவே, அங்கிருந்தபடி, இது போன்ற பேச்சுகளை ஷேக் ஹசீனா வெளியிடுவதைத் தடுக்க, இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement