காங்கோவில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை

34

கோமா: காங்கோவில் நுழைந்த கிளர்ச்சிப் படையினர், அங்கு சிறையில் இருந்த நுாற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தீயிட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது.

அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவுடன் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஒன்றான எம் - 23, அங்குள்ள முக்கிய நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது.

காங்கோவின் முக்கிய நகரமான கோமாவை அந்த குழுவினர் சமீபத்தில் கைப்பற்றினர். இதையடுத்து, அங்கு பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

கோமா நகரில், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைகளை தங்கள் போர் ஆயுதமாக எம் - 23 கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள 'மன்சென்ஸே' சிறைச்சாலையில், சமீபத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்கள் சிறையில் இருந்து தப்பித்ததாகவும், சிறைச்சாலையில் புகுந்த கும்பல் அங்கிருந்த நுாற்றுக்கணக்கான பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்றுள்ள ஐ.நா., அமைதி பேச்சுக்குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் இருந்த சிறைச்சாலை தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும், இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காங்கோ நாட்டின் ராணுவம் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்ததுடன், அதை உடனடியாக அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, காங்கோவின் பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அண்டை நாடான ருவாண்டா ஈடுபட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடும்படி ருவாண்டாவை வலியுறுத்தியுள்ளது.

Advertisement