பழநி யாத்திரை சுகமானது: நல்ல பலனை தரும்; முன்னாள் நீதிபதி பேச்சு

நெற்குப்பை: திருப்புத்துார் ஒன்றியம் நெற்குப்பை பழநி கோயில் வீட்டில் பாரம்பரிய கட்டளைக்காவடியுடன் 425 ஆண்டுகளாக பழநி செல்லும் பாதயாத்திரை துவக்க விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மெ.சொக்கலிங்கம் பேசுகையில், பழநி யாத்திரை செல்வது சுகமானது. யாத்திரையால் கிடைக்கும் பலன் அதிகம்' என்றார்.

நேற்று காலை 7:00 மணிக்கு அன்னதான மடத்தின் குருபீடமான தெய்வநாயக தேசிகரின் வாரிசு தேசிகர் கட்டளைக் காவடி கட்டித்தந்தார்.

தொடர்ந்து பூஜாரி செட்டியார் விபூதி பையில் எடுத்துச் செல்லும் வேலாயுதசுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பாதரக்குடி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

நீதியரசர் மெ.சொக்கலிங்கம் பேசியதாவது: பழநி பாதயாத்திரை செல்வது சுகமானது.செல்லும் போது கிடைக்கும் பலன் அதிகம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

1970 ல் பாதயாத்திரை செல்லும் போது 200 பேர். எவ்வளவு வேலை இருந்தாலும் விடாமல் 40 ஆண்டு யாத்திரை சென்றுள்ளேன். இன்று லட்சக்கணக்கானோர் செல்கின்றனர். இது எப்படி சாத்தியமானது.

பலன் பெற்றவர்கள் சொல்லி,சொல்லித்தான். இப்போது பலன் பெற்றவர்களும் இருக்கிறார்கள். பெற வேண்டியவர்களும் இருக்கிறார்கள். இங்கு யாத்திரைக்கு வழிகாட்டியாக வருவது கட்டளைக்காவடி.

பழநி ஆண்டவர் கட்டளையிட்ட பின் குமரப்பச் செட்டியார் காவடி எடுத்தது தான் கட்டளைக்காவடி. 425 ஆண்டுகளாக முருகன் அருளால் காவடி தொடர்கிறது. இறைவன் கருணையால் தான் நாம் அனைவரும் உயர்ந்துள்ளோம்.

பர்மா, இலங்கை எல்லாம் போச்சு ஆனால் நகரத்தார் சமூகத்தினர் கீழே போகவில்லை, பக்தியும், தர்மமும் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் உண்டு' இவ்வாறு பேசினார்.

மாலையில் குமரப்பரின் 14 வது தலைமுறையினர் கட்டளைக்காவடியுடன் பாதயாத்திரை துவங்கியது. பிப்.13 மாலையில் பழநி ஆண்டவருக்கு காவடி செலுத்தப்பட உள்ளது.

Advertisement