முருகன் கோவில்களில் தைக்கிருத்திகை காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைக்கிருத்திகை விழாவையொட்டி, நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பின் மூலவருக்கு தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் தேர் வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடிக்கிருத்திகைக்கு காவடிகள் எடுக்க தவறிய பக்தர்கள், தைக்கிருத்திகைக்கு அதிகளவில் காவடிகள் எடுப்பர். அந்த வகையில் நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மலர், மயில் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து, நேர்த்தி கடனை நிறைவேற்றினர். தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் பொதுவழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் டிக்கெட் பெற்றவர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர்.
நகரி:
சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, ஏகாம்பரகுப்பம் முருகன் கோவில், புதுப்பேட்டை அகரவிநாயகர் மற்றும் கரகண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் முருகர் சன்னிதிகளில் தைக்கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
ஊத்துக்கோட்டை:
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியில் கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலிலும் முருகன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
பள்ளிப்பட்டு:
பள்ளிப்பட்டு அடுத்த, நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவிலில் தைக்கிருத்திகையையொட்டி, காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
இதில், சொராக்காய்பேட்டை, பள்ளிப்பட்டு, நெடியம், வெங்கம்பேட்டை, ஆந்திர மாநிலம், சத்திரவாடா, புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து, தரிசனம் செய்தனர்.