சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமம், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.

வேண்டுதல் நிறைவேற, பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்துவது வழக்கம். கடைசியாக கடந்த, அக்டோபர் மாதம், 23ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

அதன் பின், நேற்று, கோவில் வெளி பிரகாரத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், பொன்னேரி ஆய்வர் முருகன், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 5:45 மணி வரை காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. ரொக்கமாக, 98 லட்சத்து 68,960 ரூபாய் பணம், 113 கிராம் தங்கம், 9 கிலோ 240 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement