நீதிபதிகள் நேரடி நியமனத்தில் பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கோரிக்கை
கோவை:நீதிபதிகள் நேரடி நியமனத்தில் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்குமாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
நீதித்துறை நியமனங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் இருக்கும் இட ஒதுக்கீடுகள், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில்முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.
அரசு நிர்வாகத்தில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு, 19 சதவீதமும், இதர பிற்பட்டோருக்கு, 50 சதவீதம் என, 69 சதவீத இட ஒதுக்கீடுகள் உறுதியாக்கப்பட்டுள்ளன.மதுரைக் கிளை உட்பட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 75.
இதில் காலியாகும், 19 இடங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்கும் பணி தொடங்கி உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை துவங்கி, 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒருவர் கூட அங்கு நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் பறையர் சமுதாயத்திற்கும் நீதித் துறையில் முறையான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.இட ஒதுக்கீடுகளும், சமூக நீதியும் முறையாக அமலாக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கக் கூடிய அமைப்பாக உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் உள்ளன.
அத்தகைய உயரிய அமைப்புகளில் அனைத்துசமுதாயத்தவரும் நீதிபதிகளாக அமர்த்தப்படும் போது தான் மக்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை ஏற்படும்; சமூக நீதியும் நிலைநாட்டப்படும்.
19 புதிய நீதிபதிகள் நியமனத்தில் தகுதி வாய்ந்த தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு நேரடி நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும்.உச்ச நீதிமன்ற கொலிஜியம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.