எமனேஸ்வரம், நயினார்கோவில் ரோட்டில் நெரிசலால் அவதி

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் - நயினார்கோவில் ரோட்டில் நாள் முழுவதும் நெரிசல் ஏற்படும் நிலையில் ஒரு வழி பாதையாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் 10 வார்டுகள் உள்ளன. பரமக்குடி- இளையான்குடி ரோட்டில் இருந்து எமனேஸ்வரம் விலக்கு ரோடு செல்கிறது. ஒரு கி.மீ., க்கும் மேல் நகருக்குள் ரோடு செல்கிறது. இந்த ரோடு 15 முதல் 20 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது.

மேலும் ஏராளமான வளைவுப் பகுதிகள் உள்ளன. இந்நிலையில் ரோட்டையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள் என நெருக்கமாக இருக்கிறது.

இதனால் வீட்டை விட்டு வெளியில் வரக்கூட முடியாமல் சிரமம் அடைகின்றனர். கடைகளை நடத்துவோர் வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

ஒரு சில இடங்களில் சிறிய அளவில் ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் நாள் முழுவதும் நெரிசல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இதனால் எமனேஸ்வரம் வைகை நகரில் இருந்து சர்வீஸ் ரோட்டில் ஒரு வழி பாதையாக போக்குவரத்தை மாற்றம் செய்யலாம்.

மேலும் எமனேஸ்வரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement