ஒருபுறம் 'மில்லிங்' மறுபுறம் 'டிரில்லிங்'

பல்லடம்; பல்லடத்தில், -பொள்ளாச்சி நெடுஞ்சாலை, உடுமலை வழியாக, கேரள மாநிலத்தை இணைக்கிறது. அதிகளவில், சரக்கு வாகனங்கள், கன்டெய்னர்கள், கறிக்கோழி வாகனங்கள் என, ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன.

வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் இருந்து, பொள்ளாச்சி, உடுமலை ரோடு சந்திப்பு வரை ரோடு சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக, ரோட்டின் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் மில்லிங் செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, ரோட்டின் மற்றொரு பகுதியில், குழாய் பதிப்பு பணிக்காக டிரில்லிங் செய்தும், பொக்லைன் உதவியுடன் குழி தோண்டப்பட்டும் வருகிறது.

ஒருபுறம் மில்லிங், மறுபுறம் டிரில்லிங் என, ரோட்டின் இருபுறமும் பணிகள் நடப்பதால், ரோடு முழுவதும் மண்புழுதியாக காணப்படுகிறது. இதனால், புழுதியில் சிக்கியும், மில்லிங் செய்யப்பட்ட ரோடால் வாகன ஓட்டிகள் தடுமாறியும் சென்று வருகின்றனர். ஒரே நேரத்தில், ரோட்டின் இருபுறமும் பணிகள் மேற்கொள்வதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால், ரோடு சீரமைப்பு மற்றும் குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடித்து, ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement